பொது : கண்களில் மச்சம் இருப்பது மிக விசேஷமானது அத்தகையவர்கள் மிகவும் பாக்கியசாலிகளாக இருப்பார்கள். "வலது கண்ணில் பாப்பாவுக்கு வலதுபுறமாக மச்சம்" இருந்தால், மிக்க செல்வந்தனாக இருப்பான். பிறவிச் செல்வந்தனான இவனுக்கு எதிர்பாராத வகையில் வாரிசு சொத்தும் அதிகமாகக் கிடைக்கும். மனிதனாகப் பிறவியெடுத்தவன் உலகில் அனுபவிக்கக்கூடிய சகல போகங்களையும் அனுபவிப்பான். பணிவுள்ளவனென்றும், தயாளனென்றும் நண்பர்களாலும் பொது ஜனங்களாலும் பாராட்டுதலைப் பெறுவான். "கண் பாப்பாவுக்கு இடதுபுறமாக மச்சம்" இருந்தால் மேற்கண்ட பலனே சற்று குறைவான அளவில் இருக்கும். "வலது கண் இரப்பை மீது மச்சம்" இருந்தால் அத்தமையவன் தெய்வபக்தி நிரம்பியவன் வாகனங்கள் போன்ற சகல சுகங்களும் பெற்றிருப்பான். எப்பொழுதும் புண்ய காரியங்களைச் செய்து கொண்டும், சுகபோகங்களை அனுபவித்துக்கொண்டும் ஆனந்தமாக வாழ்க்கையை நடத்துவான். "கண் இரப்பை மீது இடதுபுறம் மச்சம்" இருந்தால், வாழ்க்கைக்குரிய வசதிகள் அதிகமாக இல்லாமலிருப்பான். செய்யும் முயற்சிகளில் தோல்வியும் எல்லோராலும் இகழப்படுவான். "இடது கண்ணில் விழிக்கு வலதுபுறம் மச்சம்" இருந்தால், பெண்கள் சகவாசம் இருந்து, பூர்வீக சொத்து சுதந்திரங்களை அழித்து விடுவான்.எப்பொழுதும் மனோவியாதி குடிகொண்டு வாழ்கையே ஒரு பாரமாகி ஏழையாகவே காலம் கழிப்பான். "இடது கண்ணில் விழிக்கு இடதுபுறம் மச்சம்" இருந்தால், நண்பர்கள் சுற்றத்தாருடன் பகைமை கொண்டு, பலவித இன்னல்களுக்கு ஆளாகி, மிக மிக ஏழையாக வருந்துவான். "இடது கடைக் கண்ணில் மச்சம்" இருந்தால் மிகவும் நல்லவனாகவும் பந்துக்களால் விரும்பப்படுகிறவனாகவும், மிகவும் பணிவுள்ளவனாகவும், உண்மையே பேசுபவனாகவும் இருப்பான். இவர்களில் சிலர் நடு வயதிலேயே மரணமடைவார். "கண்களின் இறுதியில் மச்சம்" இருந்தால் நற்குணங்கள் நிரம்பப் பெற்றிருப்பான். தான தர்மங்கள் செய்வதில் விருப்பமுள்ளவன். மிக்க அறிவாளியாகவும், எதையும் துணிந்து செய்யும் தைரியசாலியாகவும் திகழ்வான். மக்களால் பாராட்டப் பெறுவான். ஆனால், எதிர்பாராத வகையில் பிறரால் கொல்லப்படுவான். "கண்களின் இறுதியில் தண்ணீர் வழியுமிடத்தில் மச்சம்" இருந்தால், பிறந்த பிள்ளைகள் மரணமடைவதன் மூலம் புத்ர சோகத்தால் வருந்துவான். "கண் கீழ் இரைப்பைகளின் மேல்பாகத்தில் மச்சம்" இருந்தால் மன அமைதி குறைவாக இருக்கும். மேன் மேலும் கஷ்டங்களும் விரோதங்களும் தோன்றி, மனத்தில் அமைதி இல்லாமையால் இடம் விட்டு ஓடி, க்ஷேத்ராடனம் செய்து ஓரளவு மன அமைதியைத் தேடிக் கொள்வான். "கீழ் இரைப்பைகளின் உட்புறத்தில் மச்சம்" இருந்தால் நன்மை தராது. வறுமையால் வருந்துவான்.பிறர்களால் நிந்திக்கப்படுவான். "இடது கன்னத்தில் மச்சம்" இருந்தால், எந்தத் தொழிலைத் தொடங்கினாலும் இடையூறுகள் உண்டாகும். மற்றவர்களால் அவமதிக்கப் பெற்று மன வேதனையை அனுபவிப்பான். குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.